சென்னை: தியாகராய நகர் ராகவைய்யா சாலையில் வசித்து வந்த சித்த மருத்துவர் மலர்கொடி (67) என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட மலர்கொடியின் வீட்டில் இருந்து 5 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.30 லட்சம் ரூபாய் திருடு போனது. இது குறித்து மரணமடைந்த மலர்கொடியின் சகோதரர் சித்த மருத்துவர் ஆனந்த குமார் (70) என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஆதாய கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாண்டி பஜார் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மலர்கொடி வீட்டில் வேலை செய்த அழகர்சாமி என்பவர் தனது சகோதரர் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் சக்திவேலுடன் சேர்ந்து மலர்கொடியை கொலை செய்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
அதனடிப்படையில் போலீசார் விசாரணை செய்து ஆதாயக் கொலையில் ஈடுபட்ட அழகர்சாமி (22), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் (24) ஆகிய இருவரை கடந்த 2002 ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான ராமகிருஷ்ணன் என்பவர் தலைமறைவான நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர். குறிப்பாக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் தொடர்ந்து 20 வருடங்களாக ராமகிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வந்தார். சமீபத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருக்கக்கூடிய நபர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான ராமகிருஷ்ணன் திண்டுக்கல் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பாண்டி பஜார் காவல் துறையினர் திண்டுக்கல் விரைந்து சென்று 20 ஆண்டுகளாக தலைமறைவாகயிருந்த ராமகிருஷ்ணனை (42) கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்தவுடன் கேரளாவில் பதுங்கி ஹோட்டலில் பணிபுரிந்ததாகவும், பின்னர் திருப்பூரில் துணி கடையில் வேலை பார்த்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் வேலைபார்த்து வந்த போது, கொலை வழக்கில் கைதான அழகர்சாமியை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் கொலை வழக்கு தள்ளுபடி ஆனதாகவும், இனி பதுங்கி இருக்க தேவையில்லை என நினைத்துள்ளார். இதனால் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்து சொந்தமாக பரோட்டா கடை வைத்து, உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று வீட்டின் மொட்டை மாடியில் உறங்கி கொண்டிருந்த போது, தனிப்படை போலீசார் கைது செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். குடும்பத்தினரிடம் செல்போன் பேசினால் போலீசார் நெருங்கக்கூடும் என நினைத்து பயன்படுத்தாமல் இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை வழக்கு முடிந்துவிட்டதாக கிடைத்த தகவலின் பேரில் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியதாகவும், அப்போது போலீசார் தன்னை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ராமகிருஷ்ணனை பிடிப்பதற்காக 20 ஆண்டுகளாக அவரது வீட்டை நோட்டமிட்டு வந்ததாகவும், சமீபத்தில் அடிக்கடி ராமகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து செல்வதாக தகவல் கிடைத்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ணனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கொலை வழக்கு கைவிடப்பட்டதாக நினைத்து சொந்த ஊர் திரும்பியவர் கைது