சென்னை: ஸ்மூல் (Smule) என்ற செயலி மூலமாக பிரபலமான மெட்டுகளுக்கு ரசிகர்கள் பாட வழி செய்வதோடு, அந்த ஒலிப்பதிவை பலவிதங்களில் பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த பகிர்வுகள் விதவிதமான உரையாடலாகவும் மலர்ந்து நட்பு வலையை பெரிதாக்குகிறது.
இசை சமூக ஊடகம் என சொல்லக்கூடிய ஸ்மூல் செயலி மூலமாக கல்லூரி பயிலும் மாணவிகள், திருமணமான பெண்களிடம் நட்பை உருவாக்கி, முகநூல், வாட்ஸ் அப் எண்களை பெற்று அவற்றின் மூலம் நட்பாக பழகி நகை, பணம் பறித்த நபரை சென்னை காவல் துறையினர் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் பிரிவில் கல்லூரி மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் “ஸ்மூல் செயலி மூலம் எனக்கு அறிமுகமான நபர் ஒருவர், எனது தனிப்பட்ட விவரங்களை தன்னிடம் வாங்கி பழகி, பின் தன்னைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி ரூ. 17 ஆயிரம் பணம், 13.5 சவரன் நகைகளை பறித்துள்ளார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
பெண்களிடம் பணம் பறித்த நபர்
இந்த புகார் மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உள்பட 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஸ்மூல் செயலி மூலமாக டூயட் பாடி பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களது முகநூல் கணக்கு, வாட்ஸ்அப் எண் ஆகியவற்றை வாங்கி அதன் மூலமாக நட்பை வளர்த்துள்ளார்.

பின்னர், அவர்களை காதலிப்பதாக கூறி நெருக்கத்தை வலப்படுத்தியுள்ளார். இதையடுத்து, தனக்கு அவசர உதவி தேவைப்படுகிறது என்றும் தனது பாட்டி இறந்து விட்டதாக கூறியும், அடுத்தவர்களுக்கு உதவி செய்யவுள்ளதாகவும் பல காரணங்களை கூறி பெண்களிடம் பணம் பறித்து வந்துள்ளார். இவர் பணம் கேட்டு கொடுக்கவில்லை என்றால் அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, பெற்றோரிடம் காண்பித்து விடுவேன் என மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
பெண்களை ஏமாற்றியவர் கைது
இதையடுத்து, லோகேஷின் செல்போனை காவல் துறையினர் ஆய்வு செய்ததில் அவர் நிஷாந்த், விமலேஷ் என்ற பொய்யான பெயர்களில் சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களையும், புதுச்சேரி, மலேசியா பெண்களையும் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பணம் பறித்து வந்தது தெரியவந்தது.

பி.ஏ. முதலாம் ஆண்டுடன் படிப்பை நிறுத்திவிட்டார். அப்பா கூலி வேலையும், அம்மா வீட்டு வேலையும் செய்து வரும் நிலையில் பெண்களிடம் முதலில் சின்ன சின்ன உதவிகளை கேட்டு வந்த அவருக்கு பணம் எளிதாக கிடைக்கவே அதனை வாடிக்கையாக வைத்துள்ளார்.
குற்றவாளிக்கு சிறை
நேரடியாக சென்று நகையோ, பணத்தையோ பெறாமல் வங்கிகள் மூலமாகவும், நகைகளை கொரியர் மூலமாகமும் பெண்களிடம் இருந்து பெற்று வந்துள்ளார். அவரிடம் இருந்து 72.2 கிராம் தங்க நகைகள், இரண்டு செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், லோகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுவரை 15 பெண்களிடம் சுமார் 5லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகவும், இவரை காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவரிடம் ஏமாந்தவர்கள் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: போலி காசோலை மூலம் ரூ.10 கோடி சுருட்ட முயன்ற வழக்கு - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்