ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்ற பகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரியும், தள்ளிவைக்கப்பட்டுள்ள ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தக் கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன் மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சேலம் உள்ளிட்ட ஒன்றியங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தாக்கல் செய்துள்ள கூடுதல் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என தெரிவிக்கப்பட்டது.
போதிய ஒன்றிய கவுன்சிலர்கள் வராத காரணத்தினால் சிவகங்கை மாவட்டஊராட்சி தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் அலுவலர்களுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணத்தினால் 10 ஒன்றிய தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கைகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள்தான் பரிசீலப்பார்கள் என்றும் திமுகவின் மனு விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மறைமுக தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை என மாநில தேர்தல் ஆணையம் கூறுவது பொய் என்றும், விருதுநகர் மாவட்டத்தில் தேர்தலின் போது அதிமுக பிரமுகர் டிஎஸ்பி வெங்கடேசனை அரிவாளால் தாக்கினார் என திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.
இதனையடுத்து, தேர்தலின்போது பதிவுசெய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் யாருடைய கட்டுபாட்டில் உள்ளது? கண்காணிப்பு கேமரா பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளிக்குமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேஷ், மாநில தேர்தல் ஆணையம் ஆய்வு செய்வதற்காகதான் தேர்தலில் சிசிடிவி கேமரா பயன்படுத்தப்பட்டது எனவும், தற்போது வரை சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
சிசிடிவி பதிவுகள் மாவட்ட ஆட்சியர் கட்டுபாட்டில் இருப்பதாகவும், சிசிடிவி காட்சிகளில் முறைகேடு நடத்த வாய்ப்புள்ளதா என விளக்கம் பெற வேண்டும் எனவும் தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் எடுத்தவர்கள் மீது வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறையினருக்கு உத்தரவு!