சென்னை அமைந்தகரை வடஅகரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (40). இவர் அதே பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வேலையை முடித்து விட்டு இரவு தன் வீட்டிற்கு வந்த சக்திவேல் அதன்பின் வெளியே வராமல் இருந்துள்ளார். அன்றைய தினம் இரவு அவர் மது அருந்திவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை சக்திவேலின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அமைந்தகரை காவல் நியைத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சக்திவேலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சக்திவேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.