சென்னை : கரோனா வைரஸ் தொற்று பொதுமுடக்கத்தின் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டது. அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவது தவறு என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் பொறியியல் மாணவர்களை தவிர்த்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த, அரியர் தேர்வு எழுத பணம் செலுத்திய மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டுதல்படி குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்க பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில், அரியர் வைத்து உள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு சிண்டிகேட் குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்ற பின்னர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும். இதனிடையே பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களின் விவரங்கள் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : பொறியியல் இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு!