சென்னை: சென்னை பல்கலைக்கழமும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகமும் இணைந்து, ஒன்றிணைந்த இளங்கலை அறிவியில் பட்டப்படிப்பினை, 2022-2023 கல்வியாண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி, சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் இளங்கோவன் மற்றும் மெல்போர்ன் பல்கலைக் கழகம் சார்பாகச் சர்வதேசத்திற்கான துணைவேந்தரான மைக்கேல் வெஸ்லி ஆகியோர் கையொப்பமிட்டனர்.
BB.sc எனப்படும் இந்த பட்டப்படிப்பு அறிவியல் பாடப்பிரிவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிர் அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்க விரும்பும் மாணவர்கள் ஒன்றிணைந்த பிஎஸ்சி பட்டப்படிப்பினை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதன்படி, முதல் நான்கு செமஸ்டர்களில் மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்கள் செய்முறை வகுப்புகளுடன் கற்றுத்தரப்படும். இறுதியாண்டில் உள்ள இரண்டு செமஸ்டர்களில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஏதேனும் ஒரு முதன்மை பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். மெல்போர்ன் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்பிற்கு இணையானதாக இந்த புதிய பாடப்பிரிவு கருதப்படும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை - காரணம் இதுதானாம்!