சென்னை: உயர் தெளிவுத்திறன் கொண்ட 'ப்ரெயின் இமேஜிங்'-இல் (Brain Imaging) கவனம் செலுத்தி, மனித மூளையை செல்களின் மட்டத்தில் மற்றும் இணைப்பு நிலைகளில் வரைபடமாக்கும், உலகளாவிய திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தில், 'சுதா கோபாலகிருஷ்ணன் ப்ரெயின் சென்டர்' என்ற மையம் சென்னை ஐஐடியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனித மூளைத் தரவுகள், அறிவியல் வெளியீடு, தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவற்றை உருவாக்கி, உலகளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாக மாற்றுவதே இந்த மையத்தின் நோக்கமாகும்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பு
இதுகுறித்து 'ஈடிவி பாரத்'திடம் பேசிய சென்னை ஐஐடியின் இயக்குநர், பேராசிரியர் வி.காமகோடி, "மருத்துவத்துறையிலும், சமூகம் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்கவும் தொழில் நுட்பம் தனது பங்களிப்பை வழங்க முடியும் என்பதற்கும் 'ப்ரெயின் ரிசர்ச் சென்டர்' சிறந்த ஆய்வு மையமாகத் திகழ்கிறது.
மூளை ஆராய்ச்சிக்கான தரவுகளைச்சேகரிப்பதில் இந்த மையம் ஆழமாக முன்னெடுத்துச் செல்லும். மேலும், தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்திட்டத்தின் மூலம் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் பிஎஸ்சி படிப்பில், ஐஐடியில் 300 பேர் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதுபோன்ற தரவுகளை பகுப்பாய்வு செய்யும் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.
மூளையின் வரைபடம்
மேலும், சுதா கோபாலகிருஷ்ணன் மையத்தின் தலைவரும், மின்சாரப் பொறியியல் துறை பேராசிரியருமான மோகனசங்கர் சிவப்பிரகாசம் கூறும்போது, "மனித மூளையை மிகவும் துல்லியமாக ஆய்வு செய்து மைக்ரான் அளவில் பரிசோதிக்க முடியும். மேம்படுத்திய தொழில்நுட்பத் தளம், வலுவான மருத்துவ ஒத்துழைப்பு ஆகியவற்றால் உயர் தெளிவுத்திறன் மற்றும் பெரிய வடிமைப்புடன் கூடிய மனித மூளையின் உயிர்த்திசு இணைப்பு வரிசையை உருவாக்க முடிந்துள்ளது.
இதனால், குறிப்பிடத்தக்க அளவுக்கு இந்தத் துறையை முன்னெடுத்துச் செல்ல முடியும். ஏற்கெனவே, இறந்தவர்களின் மூன்று மனித மூளைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளன. மேலும் மூளையைத் தெளிவான, துல்லியமான வரைபடமாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செல்களை குறித்து தெளிவுத்திறனுடன் கூடிய மனித மூளையின் உடற்கூறு தொடர்பான '3டி டிஜிட்டல் நியூரோ அனாடமி' என்பது அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும் ஆற்றல் கொண்ட துறையாகும். இதன் மூலம் நரம்பியல் கோளாறுகள் குறித்த புரிதலும் கிடைக்கும். இங்கு உருவாக்கப்படும் தனித்துவம் மிக்க தரவுத் தொகுப்புகளை சர்வதேச ஆராய்ச்சி சமூகத்துடன் பகிர்வதன் மூலம் பரவலான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.
துல்லியமான தகவல்களை நோக்கி...
சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் தேசிய சுகாதாரத்திட்டத்தின் குழந்தைகள் நல ஆலோசகர் டாக்டர் ஜே.குமுதா கூறும்போது, "இறந்தவர்களின் மூளையை முழுவதும் ஆய்வு செய்து, துல்லியமாக எந்தப்பகுதியில், எந்தளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியும்.
இதனால், நோயின் தாக்கத்தின் அளவிற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க முடியும். மேலும் 20 மைக்ரோ அளவில் கண்டறியப்படுவதால், சரியான தகவல்கள் கிடைக்கும். தற்பொழுது எடுக்கப்படும் எம்ஆர்ஐ, சிடி ஸ்கேனைவிட மிகவும் துல்லியமாக கண்டறிய முடியும் என்பதால், எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் இயந்திரங்களின் தொழில்நுட்பத்திலும் மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் மூளை பாதிப்பை அறிய ஆராய்ச்சி மையம்