தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நாளை தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆன் லைன் மூலம் நடத்தப்படும் இத்தேர்வில், பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தேர்வு எழுத தகுதியான உதவியாளர்களை நியமிக்கக் கோரி பார்வை குறைபாடுள்ள மாணவர்கள், பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுசெயலாளர் மணிகண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) வினீத் கோத்தாரி, நீதிபதி சரவணன் அடங்கிய அமர்வு, பார்வை குறைபாடுள்ளவர்கள் தேர்வு எழுதும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகளின் படி முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பன குறித்து பதிலளிக்க ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆசிரியர் தேர்வில் பங்கேற்கும் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிக்களுக்கு தேர்வு எழுதுவதற்கு உதவியாளர்கள் நியமிக்கப்படுவர் எனவும், கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்து அது தொடர்பாக சுற்றிக்கையை தாக்கல் செய்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் பங்கேற்கும், பார்வை குறைபாடுள்ள மாற்றத்திறனாளிகளுக்கு, தேர்வு எழுத உதவியாளர்களை நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். தேர்வின் போது, இந்த வசதிகள் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு வழங்காவிட்டால் உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை முறையிடலாம் என அறிவுறித்திய நீதிபதிகள், தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.