சென்னை: மறைந்த நடிகர் விவேக் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், மருத்துவமனையிலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நாட்டில் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்துகளைப் பேசினார்.
இதற்காக அவர் மீது சென்னை மாநகராட்சி அலுவலர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்குச் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரியிருந்தார் நடிகர் மன்சூர் அலிகான். தற்போது அவருக்கு ரூ.2 லட்சம் அபராத தொகையுடன் முன்பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த நீதிபதி தண்டபாணி, “கரோனா தடுப்பூசி குறித்து புரளிகள் பரப்பக் கூடாது. பதற்ற நிலையை உருவாக்கக் கூடாது. அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று அறிவுரைத்தார்.
மேலும், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களின் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் தனது அபராதத் தொகையைத் தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் பெயரில் வரைவோலை எடுத்து சமர்ப்பிக்கவேண்டும் எனச் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.