சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை தியாகராய நகர்ப் பகுதியில் சென்ற இருசக்கர வாகனத்தில் ஆட்டோ மோதியதில், அந்த வாகனத்தை ஓட்டிய சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாள்களாக சிகிச்சைப் பெற்று திரும்பிய நிலையில், விபத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடு வழங்க, 'நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி மோட்டார் வாகனத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மோட்டார் வாகன சட்டத்திற்கு முரணாக 18 வயது பூர்த்தியாகாத சிறுவன் ஓட்டியபோது ஏற்பட்ட விபத்து என்பதால், இழப்பீடு வழங்க மறுத்து மனுவை நிராகரித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு ஏழு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி சென்னை நீதிமன்றத்தில் சிறுவன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு நீதிபதி எஸ். கண்ணம்மாள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காப்பீட்டு நிறுவனம் தரப்பில், 18 வயது நிறைவடையாதவர்கள் வாகனத்தை இயக்கக் கூடாது என விதிகள் உள்ள நிலையில், அதை மீறி சிறுவன் ஓட்டியபோது ஏற்பட்ட விபத்தில் இழப்பீடு வழங்க முடியாது என்று மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
காப்பீட்டு நிறுவனம் தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி கண்ணம்மாள், இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் இந்த வழக்கில் இழப்பீடு வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டால், சிறுவர்கள் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்துகளில் இழப்பீடு தொடர்பான வழக்குகள் குவிந்து விடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி, அதை ஊக்குவிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதற்கான சரியான தருணம் என்றும், இது போன்ற மேலும் ஒரு சம்பவம் நிகழாத வகையில் சட்டத்தை அமல்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மறைமுக தேர்தல் முடிவுகள் : சென்னை மாநகராட்சியின் 340 ஆண்டு கால வரலாற்றில், இது ஒரு மைல்கல்