சென்னை: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அபிஷ்ட வரதராஜ சுவாமி கோயில் தேர் திருவிழாவை இன்று (மே 16) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், தேர் வலம் வரும் தெருக்களை ஆய்வு செய்த அறநிலையத் துறை ஆய்வாளர், தேரோடும் பாதை இரு இடங்களில் குறுகலாக இருப்பதாகவும், மின் கம்பங்கள் சாலையோரம் இல்லாமல், சாலையின் உள்பக்கம் அமைந்துள்ளதாகவும், மின் கம்பிகள் தேர் உயரத்தை விட தாழ்வாக உள்ளதாகவும் கூறி, தேர் திருவிழாவை நிறுத்தும்படி கடந்த 13 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தைத் தொடர்ந்து, பாப்பாரப்பட்டி கோயில் தேர் திருவிழாவை நிறுத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கோயிலின் பரம்பரை அறங்காவலர் சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை, அவசர வழக்காக நீதிபதி சுவாமிநாதன் நேற்று (மே.15) வாட்ஸ் ஆப் மூலம் விசாரித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த 80 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கோயில் தேர்திருவிழாவின் போது, தேர் ஊர்வலம் வர எந்த இடையூறும் இல்லை எனவும், தேர் திருவிழாவுக்காக வருவாய் துறை, மின்சார வாரியம், உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுள்ள நிலையில், தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், 22 அடி உயரம் கொண்ட தேரை விட தாழ்வாக மின்சார கம்பிகள் செல்வதாகவும், தேரோட்டம் நடக்கும் தெருவில் சாக்கடை கால்வாய்க்காக தோண்டப்பட்டு, மணல் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கவே திருவிழாவை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர் திருவிழாவை நிறுத்தும்படி உத்தரவு பிறப்பிக்க அறநிலையத் துறை சட்டப்படி, அறநிலையத் துறை ஆய்வாளருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், தேர் திருவிழாவின் முக்கியத்துவத்தைப் பட்டியலிட்ட நீதிபதி, தேர் திருவிழா சுமூகமாக நடத்தி முடிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது மாநில அரசு மற்றும் அறநிலையத் துறையின் கடமை என தெரிவித்துள்ளார்.
பாரம்பரியமாக நடத்தப்படும் தேர் திருவிழா போன்ற விழாக்களைப் பாதுகாப்புடன் நடத்தி முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி, அதற்கு ஏதுவாக சாலைகளை உள்ளாட்சி அமைப்புக்கள் முறையாகப் பராமரிக்க வேண்டும் எனவும், மின்சார வாரியம், மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பாப்பாரப்பட்டியில் அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதி, இன்று (மே 16) தேர் திருவிழா எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார். அதேபோல, தேர் திருவிழாவின் போது, மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் எனவும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'இது தாங்க திருவிழா'... இந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்..!