சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த 237 வழக்குரைஞர்கள், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் தலைமை நீதிபதி என்.வி. ரமணா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்று 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவரது மாற்றம், பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்காகவா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளதாக, 237 வழக்குரைஞர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல 75 நீதிபதிகளை கொண்ட சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இரு நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜியை மாற்றுவதும் கேள்வியை எழுப்பியுள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “எந்தப் பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது எனவும், இந்த மாற்றம் என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனவும் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ‘மக்களின் நம்பிக்கையை நீதிபதிகள் காப்பாற்ற வேண்டும்’ - தலைமை நீதிபதி தகில் ரமணி