சென்னையை சேர்ந்த சுஜித் பிரபு துரை என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நாட்டில் சாலை விபத்துகளை தவிர்க்கவும், எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கவும் மத்திய அரசு, கனரக சரக்கு வாகனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுத்து, சட்டம் இயற்றி உள்ளது. இதுதொடர்பாக 2019ஆம் ஆண்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வழிமுறைகளை தமிழ்நாடு அரசோ, வாகனங்களை பதிவு செய்யும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களோ பின்பற்றவில்லை, எனவே மத்திய அரசின் சட்டத்தை பின்பற்ற உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 2) தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு பொதுநலனோ? தனிப்பட்ட நலனோ? குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களோ? இல்லாமால், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தொடரப்பட்டுள்ளது. எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டதால், ஆதாரங்களை சமர்பிக்க இரண்டு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த அபராத தொகையை 15 நாள்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு தாரர் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் புது உத்தரவு