surappa case: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, அது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.
இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல்செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கத் தடைவிதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.
நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தாக்கல்செய்த நிலையில், அதன் நகலை சூரப்பாவுக்கு வழங்கலாமா என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் விசாரணையின் அறிக்கையைப் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு அனுப்பிவிட்டதாகவும், அதை சூரப்பாவிற்குத் தர இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் அறிவுரைப்படி மூன்று மாதங்களில் அவர் முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, அறிக்கையை வழங்க ஏன் அரசு தயங்குகிறது எனக் கேள்வி எழுப்பியதுடன், வேந்தர் முடிவெடுப்பதற்கு முன்பாக வழங்கினால்தான் சம்பந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பளிக்க முடியும் எனத் தெரிவித்தார். அறிக்கை வழங்க மறுக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தாலும் உத்தரவிட முடியும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
அதன்பின் அரசுத் தரப்பில் வேந்தர் என்ற அடிப்படையில் அவரது பணி சட்டப்பூர்வமான பணி என்றும், அரசியலமைப்புச் சட்டப்பணி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சூரப்பா தரப்பில் தனக்கு எதிரான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதே வேந்தரின் கவனத்திற்கு கொண்டுசெல்லபடவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
இதையும் படிங்க: மண்பாண்டங்களை மறந்த மண்ணின் மைந்தர்கள்: மாறிவரும் பண்பாடு?