தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், வானகரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் நேற்று(ஜன.24) மாலை கார் மற்றும் ஆட்டோவில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் சுங்கச்சாவடியில் இருந்த கட்டணம் வசூலிக்கும் பூத்களை சரமாரியாக அடித்து உடைத்தனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத சுங்கச்சாவடி ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இதில் நான்கு கண்ணாடி பூத்கள் முற்றிலும் உடைந்து நாசமானது. இதையடுத்து சுங்கச்சாவடியை அடித்து உடைத்து விட்டு அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து மதுரவாயல் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அங்கு உடைந்திருந்த கண்ணாடி துகள்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். இதில் 3 ஊழியர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பாபு (31), என்பவர் கார் ஓட்டி வருவதாகவும், அவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் செங்கல்பட்டு மாவட்டம், சின்னமலை ஒன்றிய தலைவராக இருப்பதாகவும், கோயம்பேட்டில் சவாரி சென்று விட்டு திரும்பி வரும்போது கட்டணம் செலுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு கட்டணம் செலுத்தி விட்ட பின்னரும், ஊழியர்கள் அவரது செல்போனை பிடுங்கி வைத்து கொண்டு சில மணி நேரம் கழித்து செல்போனை கொடுத்ததாகவும், செல்போன் பின்னால் வைத்திருந்த ரூ.4,500 பணத்தை எடுத்து கொண்டதாகக் கூறி, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிகழ்வால் பாதிப்புக்குள்ளானவர்கள், தற்போது சுங்கச்சாவடி அடித்து சேதப்படுத்தினரா என்ற கோணத்தில் மதுரவாயல் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடியை கையில் வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படாமல் செல்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆந்திரா டோல்கேட்டில் பறந்த தமிழ்நாடு லாரி - சிசிடிவி!