சென்னை: பசுமை சைதை திட்டத்தின் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சைதாப்பேட்டை வ.வூ.சி தெருவில், இன்று பிறந்தநாள் காணும் குழந்தைகளின் பெயரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்:
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் தடுப்பூசிப் போடும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது. தற்போது வரை ஒரு கோடியே 50 லட்சத்து 26 ஆயிரத்து 50 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 1 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 635 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மேலும் இன்று இரவுக்குள் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆகையால் கூடுதல் தடுப்பூசி ஒதுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்திவருகிறது.
2015இல் இருந்தே எய்ம்ஸ் திட்டம்
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு அறிவித்தது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனையை கட்ட திட்டமிட்டது.
எனினும் அதிமுக ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. அதற்காக அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் பதவியேற்றவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமருக்கு கடிதம் மூலமாகவும் நேரிலும் வலியுறுத்தினார்.
எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை
தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவர்களை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கல்லூரியிலோ அல்லது மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளிலோ அல்லது மதுரை அரசு மருத்துவ கல்லூரியிலோ சேர்த்து கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் தமிழ்நாடு மாணவர்களை சேர்ப்பதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதும் அல்லது மதுரை அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்ப்பதும் சூழலுக்கு பொருந்தாது.
எனவே மாற்று ஏற்பாடாக தமிழ்நாட்டில் மதுரை தேனி, சிவகங்கை, தூத்துக்குடி திருச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவர்களை பிரித்து சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது. விரைவில் இதுகுறித்து ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெற்று மாணவர் சேர்க்கை நடைபெறும். இதனை முதலமைச்சர் அறிவிப்பார்.
அதிமுக அரசே காரணம்
எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதில் காலம் தாழ்த்தப்பட்டதற்கு அதிமுக அரசே காரணம். அதிமுக ஆட்சி காலத்தில் தரப்பட்டிருக்க வேண்டிய அழுத்தத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்தில் தந்துகொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் முயற்சிக்கும் ஒன்றிய அரசு ஒத்துழைப்பு அளிக்கும். தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதுவரை பாதிக்கப்பட்ட 9 நபர்களும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மூன்றாம் அலையைத் தடுப்பது எப்படி - விளக்கும் எய்ம்ஸ் இயக்குநர்