சென்னை:Night Curfew: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் ஆன வல்லுநர் குழு ஆலோசித்து இன்று இரவுக்குள் அதன் முடிவுகளை அறிவிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், 'உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் மற்றும் உபயோகித்த எண்ணெய்யின் மறுபயன்பாட்டுத் திட்டங்கள் தொடக்க விழா' மற்றும் நுரையீரல் மறுவாழ்வு மையம் தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
நுரையீரல் மறு வாழ்வு மையம்
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், நுரையீரல் மறு வாழ்வு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.
அப்போது 49 ஆயிரத்து 455 லிட்டர் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்றப்படுவதாகவும் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் ஒமைக்ரானைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு கலந்து ஆலோசித்து இன்று இரவுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
ஐஜீன் சான்றிதழ்
மேலும், பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்து பயோடீசல் தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு மாவட்டம் முன்னிலையில் உள்ளது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சுகாதாரமான முறையில் உணவுகளைக் கையாள்வதில் சில உணவகங்கள் மற்றும் கோயில்களில் வழங்கப்படும் உணவுகளுக்கு ஐஜீன் என்கிற தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
தொற்றைக் கண்டறியும் வசதி
தமிழ்நாட்டில் 25 பேருக்கு டெல்டா வகை கரோனா பாதிப்பு உள்ளது. நேற்று (டிசம்பர் 23) வரை ஒமைக்ரான் 34 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 3 பேர் குணமாகி வீடு திரும்பினர்.
மொத்தம் 65 பேருக்குச் சோதனை முடிவுகள் வந்த நிலையில், தற்போது ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் 31 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர்களில் இன்று 5 பேர் வரை வீடு திரும்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒமைக்ரான் வைரஸ் தொற்றினைக் கண்டறியத் தமிழ்நாட்டிலேயே அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் ஹைதராபாத், புனே, பெங்களூரு உள்ளிட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன என்று கூறினார்.
இதையும் படிங்க: உ.பி.யில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: தமிழ்நாட்டிலும் ஊரடங்கா?