சென்னை: லைகா நிறுவனத் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிவந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, லைகா நிறுவனம், இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்கத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, லைகா நிறுவனம் தரப்பில், இந்தப் படத்திற்கு முதலில் 150 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 236 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகவும், இருப்பினும் 80 விழுக்காடு பணிகள் மட்டுமே முடிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.



அத்துடன் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் படத்தை முடித்துக் கொடுக்கத் தயார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஷங்கருக்கு எதிரான மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.