சென்னை சிந்தாதிரிப்பேட்டை அக்ரஹாரம் தெரு, கலவை செட்டி தெரு சந்திப்பில் பொதுமக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரித்தபோது அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு எண் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வேளச்சேரி தர்மலிங்கம் தெருவைச் சேர்ந்த முருகேசன் (43) என்பது தெரியவந்தது. தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு தடைசெய்யப்பட்டதால் வெளி மாநிலங்களில் நடைபெறக்கூடிய ஒரு எண் லாட்டரி சீட்டுக்கான எண்களை சென்னையில் வாட்ஸ்அப் மூலமாக விற்றுவந்துள்ளார்.
இதற்குண்டான தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து கூகுள் பே மூலம் பெற்றுவந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஒரு எண் லாட்டரி சீட்டை விற்றுவந்துள்ளது தெரியவந்தது.
இவரிடமிருந்து ஐந்து லட்சத்து 62 ஆயிரம் ரூபாய், இரண்டு செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். பின்னர் முருகேசனை நீதிமன்றத்தில் முன்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.