சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் அட்டகாசம் செய்துவந்த சிறுத்தையை வனத் துறையினர் மீட்டுவந்தனர்.
அபி என பெயர் சூட்டப்பட்ட அந்தச் சிறுத்தைக்கு தற்போது ஐந்து வயதாகிறது. இன்று காலை வழக்கம்போல் சிறுத்தைக்கு உணவு வைப்பதற்காக பணியாளர் பழனி என்பவர் கூண்டினுள் சென்றுள்ளார். அப்போது வெளியே சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டிற்குள் புகுந்து பணியாளர் பழனியை கடித்துத் தாக்கியுள்ளது.
பின்னர், காயங்களுடன் அலறியபடி போராடிய பழனி, கூண்டின் வெளியேவந்து சிறுத்தையை தப்பவிடாமல் கதவை மூடியுள்ளார். பழனியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சகப் பணியாளர்களும் பூங்கா அலுவலர்களும் ரத்தக் காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
உணவு வைக்கச்சென்ற பணியாளரை சிறுத்தை தாக்கிய சம்பவம் வண்டலூர் பூங்கா பணியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தினமும் பால் திருடிய இளைஞர் கைது!