சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் இன்று (மே.11) மாலை நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தினோம். தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஏழு தமிழர் விடுதலை குறித்து அரசு தரப்பில் நல்ல முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்திற்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்துள்ளது. 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கப்பட இயலாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டிருந்ததை அடுத்து, இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சட்டத்துறை அலுவலர்கள் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
முன்னதாக புதிய அரசு பொறுப்பேற்ற பின் பேரறிவாளன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.