சென்னை: நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் (ஜனவரி 20), திருக்கோயில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது, செம்மைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய முதலமைச்சர், "திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக - தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டத்தின்படி மாநில அளவில் ஒரு ஆலோசனைக்குழு இந்தத் துறைக்கு அமைக்கப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில், 6 ஆண்டு காலமாக நியமிக்கப்படாத இந்தக் குழு – 13 அலுவல் சாரா உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்டு அதற்குப் பின்னால் இந்தக் கூட்டம் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நீங்கள் எல்லாம் அரசியல் தொடர்பில்லாத - ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், ஏன் பொதுநலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் நீங்கள்.
உங்களை எல்லாம் இக்குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமித்துள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன். மகிழ்ச்சியடைகிற நேரத்தில் நீங்கள் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும் என்று உங்களிடத்தில் கேட்ட நேரத்தில் நீங்களும் மனமுவந்து ஒப்புக்கொண்டு இந்தக் குழுவிற்கு பெருமை சேர்த்துத் தந்திருக்கிறீர்கள், இந்த அரசுக்கும் பெருமை சேர்த்துத் தந்திருக்கிறீர்கள்".
மேலும் இந்து சமய அறநிலையத்துறையில் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அவர் பட்டியலிட்டார்.
1. 725 திருக்கோயில்களுக்கு திருப்பணி வழங்க அனுமதி.
2. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் 58 அர்ச்சகர்கள் நியமனம்.
3. தமிழ் மொழியில் அர்ச்சனை செய்தல்.
4. ஒருகால பூசைத் திட்டத்திற்கு 1 லட்சமாக இருந்த நிதி 2 லட்சமாக உயர்வு. அத்திட்டத்தில் உள்ள அர்ச்சகர்களுக்கு முதல் முறையாக- ஊக்கத் தொகையாக 1000 ரூபாய் வழங்குதல்.
5. 10 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள்.
6. திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்.
7. ஆயிரத்து 689 கோடி ரூபாய் மதிப்புள்ள திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு.
8. பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஓடாமல் இருந்த சமயபுரம், திருத்தணி கோயில் தங்கரதங்கள் உலா வர நடவடிக்கை.
9. திருக்கோயில்களில் உள்ள 65 தங்கத் தேர், 49 வெள்ளித் தேர்களை முறையாக பராமரித்து உலா வருவதற்கான நடவடிக்கை.
10.நூறு திருக்கோயில்களில் உள்ள நந்தவனங்கள் மேம்படுத்துதல், திருத்தேர் திருப்பணி, திருக்குள பராமரிப்பு.
11. கரோனா பேரிடர் காலத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள், ஒருகால பூசை திட்டத்தில் உள்ள அர்ச்சகர்களுக்கு 15 வகையான உணவுப் பொருட்கள் மற்றும் 4000 ரூபாய் நிதியுதவி.
12. திருக்கோயில்களில் பணியாற்றி- ஓய்வு பெற்ற அர்ச்சகர், ஓதுவார், இசை கலைஞர் ஆகியோருக்கு 1000 ரூபாயாக இருந்த ஓய்வூதியம் 3000 ஆக உயர்வு.
13.கிராம கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியம் 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாக உயர்வு.
14. அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் அகவிலைப்படி உயர்வு, 2000 ரூபாய் பொங்கல் கருணைத் தொகை.
15. திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு புத்தாடை, பணியாளர்களுக்கு சீருடை.
16. இதுவரை திருக்கோயில்களில் 68 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
17.கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 490 திருக்கோயில்களின் நிருவாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு ஒதுக்கிய நிதி 3 கோடியை 6 கோடியாக உயர்த்தி வழங்கியது.
18.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 225 திருக்கோயில்களின் நிருவாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கு 1 கோடி ரூபாய் என்பதை 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கியது.
19. பத்து கல்லூரிகள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு, 4 கல்லூரிகள் ஏற்கனவே தொடங்கியது. இதனால் 500 மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.
20. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் 1 லட்சம் நிதி 2 லட்சமாக உயர்வு.
21. கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணிக்காக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிதி 2 லட்சம் ரூபாயாக உயர்வு.
22. அன்னதானத் திட்டத்தின் மூலம் கரோனா காலத்தில் - இதுவரை 44 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பழனி தைப்பூச திருவிழா - பாரம்பரியம் மிக்க நகரத்தார் காவடிகள் வருகை