ராஜீவ்காந்தி தயாரிப்பில், திருப்பூர் குமரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குண்டான் மலை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது:
நடிகர் மகேந்திரன்: இந்த வாய்ப்பு கொடுத்தது திருப்பூர் குமரன். அவர் எனக்கு அண்ணன் அல்ல, அப்பாவிற்கும் மேலானவர். என்னைப் போன்ற பலருக்கு வாய்ப்புக் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். எல்லோரையும் பாகுபாடு பாராமல் ஒரே மாதிரி நடத்துவார். இப்படம் உருவாக முக்கிய காரணம் ஆபா சார் தான். நான் சாதாரண செங்கல் சூலை டிரைவர் தான். என்னிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வந்தவர் திருப்பூர் குமரன் தான் என்றார்.
நடிகை சோனியா: சித்த மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் குண்டான் மலை. இப்படத்தை அனைவரும் குடும்பமாக சேர்த்து உருவாக்கியிருக்கிறார்கள் என்றார்.
நடிகர் அங்கமுத்து: திருப்பூர் குமரன் அதிகம் பேச மாட்டார். ஆனால், நினைத்ததை சாதித்துக் காட்டி விடுவார். அப்படி குறுகிய காலத்தில் உருவான படம் தான் குண்டான் மலை. முன்பெல்லாம் வெற்றிகரமான 6 ஆவது வாரம் என்று வரும். இப்போது வெற்றிகரமான 6 ஆவது நாள் என்று மாறியிருக்கிறது. ஆனால், வெற்றிகரமான 6 ஆவது மணி நேரம் என்றாகிவிடக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.
இப்படத்தில் வயதான பேராசிரியர் கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். அவரின் வழிகாட்டுதலோடு சிறப்பாக நடித்திருக்கிறேன். கோபிசெட்டிபாளையம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. எல்லா இடங்களிலும் எங்களுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்தார்கள்.
மலை மீது 2 கிலோமீட்டர் ஒரே ஆளாக அத்தனை பேருக்கும் சாப்பாடும், தண்ணீரும் சுமந்து வந்த மகேந்திரனுக்கு நன்றி. சாப்பாடு செய்து கொடுத்தது இப்படத்தின் கதாநாயகி வெண்மதியின் அம்மா தான், இந்த நேரத்தில் அவருக்கு நன்றி. சிறுசிறு பொருளாதார தடை வந்தாலும், ஒரு வாரம் கழித்து மீண்டும் தொடங்குவோம்.
இப்படத்தில் இணை இயக்குநராகப் பெயர் போட்டு வாய்ப்புக் கொடுத்த திருப்பூர் குமரன் அண்ணனுக்கு நன்றி. கவிஞர் ஆபா கூற நான் எழுதினேன். அதேபோல், அனைவருக்கும் வசனங்கள் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் இயக்குநர் கொடுத்தார் என்றார்.
இசையமைப்பாளர் தீனா: பான் இந்தியா படங்கள் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படம் பான் தமிழ்நாடு படம் போல் இருக்கிறது. சேலம், கோயமுத்தூர், ஆத்தூர் என்று அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நடித்திருக்கிறார்கள். நான் திருடா திருடி படத்தில் பணியாற்றிய குழு போல் இருக்கிறது.
ராஜன் ஏன் உதவி செய்கிறார் என்றால், அவர் பசியை நன்றாக அறிந்தவர் என்பதால் தான். படங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் டிக்கெட் விலையில் 120 ரூபாய் என்றில்லாமல், 60 ரூபாய் என்று ஸ்லேப் சிஸ்டம் செய்து கொடுத்தால் அனைவரும் சென்று பார்ப்பார்கள்.
ஜாகுவார் தங்கம்: 1,500 படங்களுக்கு இசையமைத்த முதல் மனிதர் சங்கர் கணேஷ். 130 திரையரங்கில் வெளியிடுகிறோம் என்று கூறி 13 திரையரங்கில் மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள். காவல்துறையில் இருப்பவர்களையே ஏமாற்றியிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.
நாங்களே ஒரு தளம் ஆரம்பித்திருக்கிறோம். அதில் தரமான படங்களை ஆதரிப்போம். திருப்பூர் குமரன் உண்மையான மனிதர், அவருக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள். இப்படத்தை போட்டிப்போட்டு வாங்க முன் வருவார்கள். சிறப்பாக இயக்கியிருக்கிறார் திருப்பூர் குமரன் என்றார்.
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்: உழைப்பவர்கள் முன்னுக்கு வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு இவர்கள் முன்னுதாரணம். இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் அப்பா என்றால், இயக்குநர் அம்மா.
எம்.ஜி.ஆர் தான் என்னைக் காப்பாற்றினார். அவரால் தான் நான் இங்கு இப்படி நிற்கிறேன். அதேபோல், ராஜன் எம்.ஜி.ஆர். போல இருக்கிறார். சிறிய தயாரிப்பாளர்களை காப்பாற்றும் முக்கிய மனிதர் ராஜன் தான் என்றார்.
இசையமைப்பாளர் ராக ஜீவன் அஜிம் ராஜா: முதல் வாய்ப்பும் மட்டுமல்ல, இரண்டாம் வாய்ப்பும் இயக்குநர் எனக்கு கொடுத்திருக்கிறார். ஆம். அவர் அடுத்து இயக்கும் படத்திற்கும் என்னையே இசையமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். என்னுடைய யூடியூப்-ல் ஆல்பம் பாடல் கேட்டுதான் என்னை அழைத்து இந்த வாய்ப்பு கொடுத்தார்.
திருப்பூர் குமரன் கொடுத்த உடனேயே இரண்டு பாடல்களையும் இசையமைத்துக் கொடுத்து விட்டேன். அதற்கு உறுதுணையாக இருந்த ஆபாவிற்கும் வாழ்த்துகள் என்றார். இயக்குநர் திருப்பூர் குமரன் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றார்.
கதாநாயகி வெண்மதி: திருப்பூர் குமரன் சாரும், ஆபா சாரும் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார்கள். நான் அதிக நிறமும் இல்லை, எந்த நம்பிக்கையில் இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டேன். சினிமாவிற்கு அழகும், நிறமும் தேவையில்லை, திறமை தான் தேவை என்றார். என்னுடைய ரீல்ஸ் பார்த்து தான் இந்த வாய்ப்பு கொடுத்தார்.
பலரும் பெண்ணை நடிக்க வைக்காதே என்று கூறினாலும், அதைப் பொருட்படுத்தாமல் என்னை ஊக்கப் படுத்தியது என் அம்மா. ஐ லவ் யூ அம்மா, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன்: குண்டான் மலை நிச்சயம் வெற்றி கொண்டான் மலை. குடும்பமாக இருந்து ஈகோ இல்லாமல் பணியாற்றியிருக்கும் இப்படகுழுவினருக்கு வாழ்த்துக்கள். இப்படத்தைப் பார்க்கும் போது புதியதாக இயக்கியது போல் தெரியவில்லை. ஓடு ஓடு பாடல் அருமையாக உள்ளது.
சிறிய படங்கள் தான் சினிமாத் தொழிலாளர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். விழாவின் இறுதியில், குண்டான் மலை படத்தின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: இளையராஜா பாடல்கள் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்துள்ளது...இயக்குனர் ரஞ்சித்