மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு தேயிலைத் தோட்ட மாளிகையில், கடந்த 2017ஆம் ஆண்டு காவலாளியைக் கொலை செய்து, அங்கு கொள்ளையடித்ததாக, சயான் மற்றும் மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
பின்னர் இவர்கள் இருவரும் கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவின்பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட நீலகிரி அமர்வு நீதிமன்றம், இருவரின் பிணையையும் ரத்து செய்தது.
இதையடுத்து, சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஓராண்டுக்கும் மேல் சிறையில் உள்ள இருவரும், தங்களுக்கு பிணை வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் எட்டு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாலும், கீழமை நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை ஏற்கனவே தொடங்கி விட்டதாலும், தங்களுக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், இருவரின் பிணை மனுக்களுக்கும் ஜூன் 19ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: சென்னையில் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த வழக்கு!