சென்னை : கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்த நீலகிரி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரியும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடநாடு காவலாளி கொலை
இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவானது.
முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது. மேலும், காணாமல் போன பொருள்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும். புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை. இதில் சில முக்கிய குற்றவாளிகள் விடுபட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மனு தாக்கல்
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கோடநாடு வழக்கில் தம்மை சிக்க வைக்க சதி நடக்கிறது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்துள்ளார். மேலும் சட்டசபையில் இதுபற்றி பேசுவதற்கும் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பரபரப்பு
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரி புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.
இதையும் படிங்க : கோடநாடு விவகார உண்மையை வெளிகாட்டவே திமுக முயற்சிக்கிறது - தங்கம் தென்னரசு