சென்னை : ஆர்.ஏ.புரத்தில் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு,"சென்னையில் அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வு கூட்டம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மீஞ்சூர் மற்றும் வட நெம்மேலியில் 100 எம்.எல்.டி அளவிற்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னையில் நாள் ஒன்றுக்கு 1100 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவிற்கு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது. 400 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 3 வருடத்தில் நிறைவு பெறும். 600MLD குடிநீர் காவிரியில் இருந்து கொண்டு வரும் திட்டம் உள்ளது.
பாதாள சாக்கடை திட்டம்
பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆகாய தாமரையை அப்புறப்படுத்தும் 3 கருவிகள் வாங்கப்பட்டுள்ளது.
மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து நிலத்திற்குள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் விதமாக மீட்டர் பொருத்தப்பட்டு வீடுகள் தோறும் தண்ணீர் வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் உள்ள மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கண்டறிந்து, அதை மக்கள் இயக்கமாக மாற்றி மழை நீர் சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்
செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார். சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிர் இடஒதுக்கீடு போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவற்றை சரி செய்து இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்" என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, செயல் இயக்குநர் ஆகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க ; வருகிறதா 3ஆம் அலை- 38 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!