சென்னை: கரோனாவால் நுரையீரல் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி, ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது; கரோனா வைரஸ் தொற்று தொடக்கத்தில் இருந்தபோது, 100 நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தால், அவர்களில் 5 பேர் மட்டுமே தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருந்தனர்.
அப்போது நோய்த் தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவும், கட்டுப்பாட்டிலும் இருந்தது. தற்போது நோயின் தீவிரம் அதிகரித்து மருத்துவமனைக்கு நிறைய பேர் வருகின்றனர். நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களில், 40 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருகின்றனர்.
அவர்களுக்கு சிடி ஸ்கேன் எடுத்தால் நோய்த் தொற்றினால் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. மேலும், தற்போது மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு சிடி ஸ்கேன் எடுத்தால் நுரையீரல் 75 விழுக்காடு வரை பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியபடுகிறது. நோய் அறிகுறிகள் எதுவுமில்லாமல் மூச்சு திணறல், ரத்தத்தில் ஆக்ஜிசன் அளவு குறைவாக வருபவர்களுக்கும், சிடி ஸ்கேன் எடுக்கிறோம். அவர்களுக்கும் நுரையீரல் நோய்த் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்படுகிறது.
அவர்களுக்கு பரிசோதனை செய்தால் நோய்த் தொற்று இல்லை என பரிசோதனை முடிவு வருகிறது. அது தவறான முடிவாகும். எனவே அவர்களுக்கும் கரோனா நோயாளிகளுக்குரிய சிகிச்சையளித்து வருகிறோம். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறோம்.
லாம்ப், பாம்ப் வழிமுறைகளை பின்பற்றியும் சிகிச்சையளிக்கிறோம். மூச்சுத் திணறல் அதிகமாக இருக்கும் நோயாளிகளை படுக்கையிலிருந்து சிறுநீரகம், மலம் கழிக்கக்கூட அனுமதிக்காமல் படுக்க வைத்து நல்ல முறையில் சிகிச்சை அளிக்கிறோம். மேலும் ஆக்சிஜன், வென்டிலேட்டர் போன்றவற்றையும் நோயாளிகளுக்கு அளித்து வருகிறோம்.
தலைவலி, காய்ச்சல், தொண்டை வலி, உடல் சோர்வு, வாசனை நுகரும் தன்மை இல்லாதது, மூச்சு திணறல், பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு சென்றால் தங்களை பத்து நாட்கள் தங்க வைத்து விடுவார்கள் என நினைக்காமல் பொது மக்கள் நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்கு வந்தால் குணப்படுத்த முடியும்.
பொதுமக்கள் ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்கு வந்தால் நுரையீரல் பாதிப்பு இல்லாமல் அவர்களை காப்பாற்ற முடியும். அவர்கள் சில நாட்கள் கழித்து நுரையீரல் பாதிப்புடன் வரும்போது, ஒரு சிலரை நம்மால் காப்பாற்ற முடியாமல் போகிறது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வரும் நோயாளிகளில் மூச்சுத்திணறல் உடன் வந்தால், அவர்களுக்கு முதலில் சிகிச்சை அளிக்கிறோம். நோயின் தன்மைக்கு ஏற்ப அவர்களை தனிமைப்படுத்தி கரோனா சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
அரசு சார்பில் அளிக்கப்படும் மருந்துகளை நோயாளிகளுக்கு தொடர்ந்து அளித்து வருகிறோம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவர்களுக்கு வழங்க தேவையான அளவு ஆக்சிஜன் அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
மேலும், நோயாளிகளைக் கண்காணிக்க செவிலியர்களும் தனித்தனியாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக குறிப்பிட்ட நேரத்தில் உணவு மருந்து ஆகியவற்றை அளிப்பதற்கும் செவிலியர்களுக்கு பிரத்யோகமான பயிற்சி அளித்துள்ளோம். இதனால் நோய்த் தொற்றுடன் அதிகளவில் நோயாளிகள் வந்தாலும் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்" என்று வசந்தாமணி தெரிவித்தார்.