இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் பேராயர் எஸ்ரா சற்குணம், வன்னிய சமுதாயத்தை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, கிழட்டுச் சிறுத்தையான தாம் சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது என்றும் வன்னியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எஸ்ரா சற்குணத்தின் வார்த்தைகள் அவர் வகிக்கும் பதவிக்கு ஒவ்வாதவை.
அன்பையும், சகிப்புத் தன்மையையும் போதித்தவர் இயேசு பிரான். அவரது பிரதிநிதியாக தம்மை முன்னிறுத்திக் கொள்ளும் பேராயர் எஸ்ரா சற்குணம் இயேசு பிரானின் மொழிகளைப் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவரோ திருமாவளவனே பேசத் தயங்கும் நச்சு வார்த்தைகளை வாரி இறைத்திருக்கிறார். ‘‘வன்னியர்களே நீங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் தான். நீங்கள் ஒன்றும் பிராமணர்கள் அல்ல. நீங்கள் ஒன்றும் உயர் குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. நீங்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால், உங்களுக்கு நீங்களே சத்திரியர் என்ற பட்டத்தைப் போட்டுக் கொள்கிறீர்கள். நீங்கள் எந்த விதத்தில் சத்திரியர்களாக முடியும்? நானும் ஒரு விடுதலைச் சிறுத்தை என்பதைக் கூறிக் கொள்கிறேன். இந்தக் கிழட்டுச் சிறுத்தை சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது’’ என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுக்காக வன்னியர்கள் நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில், ‘‘வன்னியர்களாகிய நீங்கள் மரம் வெட்டிகளாக இருந்து, மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளி, பாறாங்கற்களையெல்லாம் உருட்டி வைத்து மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தினீர்கள்’’ என்றும் அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார்.
பேராயர் எஸ்ரா சற்குணம் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டிருந்தவன். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் சமத்துவ கிறித்துமஸ் விழாக்களில் அவரை அழைத்து சிறப்பு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவன். ஆனால், சிலரை என்னதான் தூய்மைப்படுத்தினாலும், புனிதப்படுத்தினாலும் அவர்கள் ஏதேனும் ஒரு தருணத்தில் தங்களின் இயல்பைக் காட்டி விடுவார்கள். பேராயர் எஸ்ரா சற்குணமும் அப்படித்தான் தாம் யார் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிகழ்வில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வன்னியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கொக்கரித்து இருக்கிறார். உழைக்கும் பாட்டாளிகளாகிய அவர்கள் அப்படி என்ன தவறை செய்துவிட்டார்கள் என்பது தெரியவில்லை. அப்போராட்டத்தில் பங்கேற்ற மற்ற தலைவர்களும் வன்னியர்களுக்கு எதிராக வன்மத்தை கொட்டியிருக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே சாதிக்கு அப்பாற்பட்டவர்களாகவும், சமூக நல்லிணக்கத்தை விரும்புபவர்களாகவும் இருந்தால் பொன்பரப்பியில் ஊனமுற்ற அப்பாவி ஒருவரைத் தாக்கியும், வன்னிய சமுதாயப் பெண்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியும் கலவரத்தைத் தூண்டியவர்கள் யார் என்பதை மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல வேண்டும். அதை விடுத்து வன்னிய மக்கள் மீது மட்டும் ஒரு சார்பாக அவதூறு பரப்பிக் கொண்டிருந்தால் வன்னியர் எதிர்ப்பு என்ற சாக்கடையில் அரசியல் லாபம் என்ற அரிசி பொறுக்குபவர்களாகவே அவர்களை சமுதாயம் பார்க்கும்" என கூறியுள்ளார்.