சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று(மார்ச்.1) 69ஆவது பிறந்தநாள். தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால், திமுக தொண்டர்கள் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று பல்வேறு தரப்பினர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாழ்த்தை ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவினை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
அதோபோல மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மனதிற்குகந்த நண்பர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க" எனப் பதிவிட்டுள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பதிவில், "பெரியார்-அண்ணா-கலைஞர் உள்ளிட்ட முன்னோடிகள் விட்டுச் சென்ற சமூக நீதிப் பாதையில், கழகத்தையும் தமிழ்நாட்டையும் வழிநடத்திச்செல்லும் தளபதி - அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சாதி, மத அரசியல் மட்டுமே பாஜகவிற்குத் தெரியும் - கமல் ஹாசன்