சென்னை: ஒன்றிய இணையமைச்சராக தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் பதவி ஏற்றதை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் நேற்று (ஜூலை 7) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டிற்கு இரண்டு ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. அந்தக் குறை தற்போது நீங்கியுள்ளது. புதிய அமைச்சரவையில் இளைஞர்கள், மகளிர்கள் ஆகியோர் அதிகமாக இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியை தருகிறது" என்றார்.
சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்
ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு ட்விட்டரில் கருத்து தெரிவித்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இது குறித்து குஷ்புவுக்கு அதிருப்தி இருந்தால், அதை அவர் கட்சித் தலைமையிடம் நேரடியாக தெரிவித்திருக்க வேண்டும்.
அதற்கு பதிலாக பொதுவெளியில் கருத்து தெரிவித்தது தவறு. இது என்னுடைய கருத்து" என்று கரு. நாகராஜன் தெரிவித்தார். மேலும், எல்.முருகன் தமிழ்நாட்டிற்கு திரும்பும்போது மாபெரும் வரவேற்பு வழங்கப்படும் எனவும் கரு. நாகராஜன் கூறினார்.
இதையும் படிங்க: தலைவர் பதவியை குறிவைக்கும் நயினார் நாகேந்திரன்; அணை போடும் அண்ணாமலை