வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் 70 பெர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். அதன்படி, அக்கட்சியின் துணைத்தலைவர் பொன்ராஜ் அண்ணா நகரிலும், சந்தோஷ்பாபு வில்லிவாக்கத்திலும், சட்டப் பஞ்சாயத்தின் செந்தில் ஆறுமுகம் பல்லாவரத்திலும், பாடலாசிரியர் சினேகன் விருகம்பாக்கத்திலும் போட்டியிடுகின்றனர். இப்பட்டியலில் கமல் ஹாசன் பெயர் இடம்பெறவில்லை.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், "இங்கிருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு தொழில் உள்ளது. எனவே, அவர்கள் அரசியலுக்கு வந்தது வாழ்வதற்கல்ல. என் வேட்பாளர்களுக்கு நான் சொல்வது நாம் வெற்றி பெற வேண்டும். என்னை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதல்ல வெற்றி. கோட்டைக்குள் போனாலும் நம் இலக்கை அடையும் போது தான் அது நமக்கு வெற்றி. மற்ற கட்சிகளிடம் பணம் உள்ளது, எங்களிடம் அது இல்லை. அதேபோல் அவர்களிடம் இல்லாதது எங்களிடம் உள்ளது. அது நேர்மை.
நாங்கள் அறிவிக்கும் திட்டங்களை நகல் எடுத்து அறிவிக்கிறார்கள். கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை. எங்கள் வேலை பட்டியல் போடுவது இல்லை. உங்கள் இருவரையும் (திமுக அதிமுக ) அகற்றுவது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட பாமக!