அண்மையில் காவல் துறையினருக்கு வாரம் ஒருமுறை விடுப்பு அளித்து காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவிப்பு வெளியிட்டார்.
காவல் துறையினர் தங்கள் உடல் நலனை பாதுகாத்துக்கொள்ளவும், குடும்பத்தினருடன் போதுமான நேரம் செலவழிக்கும் வகையில் இந்த விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு வார விடுப்பு எடுக்காமல் விருப்பத்தோடு பணிக்குவரும் காவலர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கவும் சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.
காவல் துறையினரின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த அறிவிப்புக்கு தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், "காவலர்களுக்கு வார விடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.
காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவுகள் நம்பிக்கையளிக்கின்றன. மகிழ்ச்சியான பணிச்சூழலில் தமிழ்நாடு காவல் துறை இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழவேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - மாநகராட்சி வேண்டுகோள்!