ரஜினியை முந்திய கமல்:
தமிழ்நாடு திரைத்துறைக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே. எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு திரைத்துறையில் கொடி கட்டிப் பறந்தவர்கள் ரஜினியும், கமலும்.

இதில் நடிகர் ரஜினி அரசியலில் குதிப்பார் என பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்தது. இதனை உறுதிபடுத்தும் விதமாக, அவர் அரசியல் தொடர்பான கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வந்தார். ரஜினி தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார்.
ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள்...
ஆனால், அரசியல் பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்த கமல்ஹாசன், யாரும் எதிர்பார்க்காத நிலையில், அரசியல் கட்சி தொடங்கி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். கடந்த 2013ஆம் ஆண்டு அவரின் 'விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது.

அப்போது விழா ஒன்றில் பேசிய கமல், தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்றும், தான் அரசியலுக்கு வருவதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்குப் பிறகு கமலின் திரைப்படமும், புதிய முயற்சிகளும் சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொண்டது. இதனையடுத்து தனது அரசியல் கருத்துகளை ட்விட்டர் மூலம் கமல் தெரிவிக்கத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து அவரின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியானது.
விஸ்வரூபமாக மாறிய கமல்:
நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் என பல அவதாரங்களை கமல் எடுத்திருந்தாலும், அவரின் அரசியல் அவதாரம் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. திரைத்துறையில், கமலை கொண்டாடியவர்கள், அரசியல் கட்சித் தொடங்கியவுடன் அவரை விமர்சிக்கத் தொடங்கினர். அரசியல்வாதி (ஆன) கமலுக்கும் இது கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது அமைதி காத்த கமல், தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் ஆனவுடன் கட்சி தொடங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், சென்னை மழை வெள்ளம் குறித்து அரசுக்கு எதிராக தைரியமாக கமல் விமர்சனம் செய்ததை சுட்டிக்காட்டும் அவரின் ஆதரவாளர்கள், 'விஸ்வரூபம்' பட வெளியீட்டின்போது நடைபெற்ற மோதல்களையும் குறிப்பிடுகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக கமல்:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 1954ஆம் ஆண்டு பிறந்த நடிகர் கமல்ஹாசன், 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரம் ஆக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர். 5 தேசிய விருதுகள், 10 ஃபிலிம்பேர் விருதுகள், 10 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் என வாங்கிக்குவித்தவர். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது. திரைத்துறையில் 60 ஆண்டுகள் பூர்த்தி செய்து உச்சத்தில் இருப்பவர், கமல்.
மக்கள் நீதி மய்யம் தொடக்கம்:
அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த கமல், அதனை உறுதிபடுத்தும் விதமாக கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியின் பெயரை அறிவித்து, கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
சூறாவளி சுற்றுப்பயணம்:
இதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனியாகப் போட்டியிட்டது. சினிமா, பிக்பாஸ் என பிஸியாக இருந்த கமல், தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி:
தமிழ்நாட்டில், அதிமுக, திமுக கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவது மிகவும் கடினம். அப்படியே கட்சி உருவானாலும் தேர்தலில் ஜொலிப்பது கடினம். இதையெல்லாம் கடந்து தேர்தலில் வெற்றிபெற்றாலும், அதைத் தக்க வைத்துக்கொள்வது மேலும் கடினம். ஆனால், மக்கள் நீதி மய்யம் சந்தித்த முதல் தேர்தலிலேயே சுமார் 15 லட்சம் வாக்குகள் பெற்றது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 விழுக்காடு ஆகும். 12 இடங்களில் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு 3ஆம் இடம் கிடைத்தது.
சட்டப்பேரவைத் தேர்தல் 2021:
இந்நிலையில், முதல்முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் தொகுதிப்பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால், 'கூட்டணிக்கு கை குலுக்கி உள்ளோம். விரைவில் அறிவிப்போம்' என கமல் தெரிவித்துள்ளார். எனவே, பிரதான கட்சிகளை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் தேர்தலை சந்திப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசியலில் நாயகனாக ஜொலிப்பாரா?
அதிமுக, திமுக என இரு பெரிய கட்சிகள் உள்ள தமிழ்நாட்டில், கூட்டணி வைப்பதன் மூலமே கட்சியையும், தொண்டர்களையும் தக்க வைக்க முடியும். இதற்கு உதாரணமாக பாமக, தேமுதிக, தமாகா, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து , தங்களது தொண்டர்களைத் தக்கவைத்துள்ளது.
திரைத்துறையில் சகலகலா வல்லவனாக, உலக நாயகனாக வலம் வரும் கமல், அரசியலிலும் நாயகனாக ஜொலிப்பாரா? இதற்கு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும். அதுவரை கமலின் புதிய பட ரிலீஸுக்கு காத்திருப்பது போல் காத்திருப்போம்...