சென்னை: கடந்த ஒரு வார காலமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டுப்போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது போராட்டம் கலவரமாக மாறி பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்தர் ரெட்டி, பள்ளிகல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு, அடங்கிய குழுவினர் நேரில் சென்று, பார்வையிட்டு, அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பாக ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர், இந்தக் குழுவினர் இன்று முதலமைச்சருடன் காணொலி காட்சி மூலம் அறிக்கையை விளக்கினர். அதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர், ’மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியைத் தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வசதியாக 5 அரசுப்பள்ளிகள், 17 தனியார் பள்ளிகள், 2 கல்லூரிகள் உள்ளது.
அதனைப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வியைத் தொடர நடவடிக்கைகள் எடுக்கலாம். கலவரத்தில் எரிந்த பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் சாதி மற்றும் பிறப்புச்சான்றுகள் வழங்க பள்ளி கல்வித்துறையும் மற்றும் வருவாய்த்துறையும் விரைந்து நடவடிக்கைகள்’ எடுக்கலாமென கூறினார்.
இதனைத்தொடர்ந்து காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு, ’மீண்டும் கலவரம் ஏற்படாமல் தடுக்க கூடுதல் காவல் துறை பாதுகாப்புப் போடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும், கலவரத்தில் தீ வைத்து காவல் துறையை தாக்கியவர்கள், கலவரத்திற்கு காரணமானவர்களை நீதிமன்ற கருத்தின் அடிப்படையில் கைது செய்து வருவதாக’ கூறி உள்ளார்.
அப்போது முதலமைச்சர் ’மீண்டும் நாளை இந்த குழுவுடன், மாணவர்கள் நலம் சார்ந்தும்; இனி இதுபோன்று ஒரு செயல் நடைபெறமால் இருக்க நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக முடிவெடிக்க குழு கூட்டம்’ நடத்தலாமென கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மறுபிரேத பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி