சென்னை: தியாகராய நகர் கண்ணம்மா பேட்டை எஸ்.பி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (72). இவரது கணவர் தியாகராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர், 30 வருடமாக வீட்டு வேலை, சமையல் வேலை செய்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சுலோச்சனா நேற்று (ஆகஸ்ட் 03) மாலை பாண்டிபஜார் பகுதியிலுள்ள முப்பாத்தம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூதாட்டியை அழைத்து பேச்சு கொடுத்தனர்.
“இந்த இடத்தில் நகைக்காக ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தெரியாதா? உங்கள் நகையை பத்திரமாக பேப்பரில் மடித்து உள்ளே வைத்துக்கொள்ளுங்கள். உயிர் முக்கியமா நகை முக்கியமா” எனக் கூறியுள்ளனர்.
பணத்தை இழந்த மூதாட்டி
இதனை நம்பிய சுலோச்சனா உடனே தான் அணிந்திருந்த 10 சவரன் நகைகளை கழட்டி அவர்கள் கொடுத்த பேப்பரில் கட்டி பைக்குள் போட்டுள்ளார். பின்பு தி.நகர் அருகே தேநீர் அருந்திவிட்டு, பணத்தை எடுப்பதற்காக பைக்குள் பார்த்தபோது மடித்துவைத்த நகை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, தனது கவனத்தை திசை திருப்பி அடையாளம் தெரியாத நபர்கள் தனது நகையை திருடி சென்றுவிட்டதாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 30 வருடங்களாக சமையல் வேலை செய்து சிறுக சிறுக நகையைச் சேர்த்து வைத்ததாகவும், ஒரு நிமிடத்தில் மொத்த நகையையும் பறித்து விட்டுச் சென்றதாகவும் கண்ணீர் மல்க மூதாட்டி தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேலூரில் 30 சவரன் நகை, ரூ. 70 ஆயிரம் கொள்ளை