சென்னை: தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
ஆணையம் தரப்பில் 120 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. பின்னர், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணையை ஓ. பன்னீர்செல்வத்திடம் நடத்தினார்.
ஓபிஎஸ் அளித்த வாக்குமூலம்
2011-12ஆம் ஆண்டு மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதாகவோ அல்லது அதுதொடர்பாக எவ்விதத் தகவலையும் காவல் துறை திரட்டவில்லை என ஆணையத்தில் ஆஜரான ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், 'சாட்சியங்கள் ஆணையத்தில் கூறியது சரிதான். ஜெயலலிதாவை குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ஜெயலலிதா என்னை அழைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கூட்டி முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளிக்க வேண்டும்.
அழாதே பன்னீர்...
அதே நேரத்தில், பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, என்னிடம் தெரிவித்த கருத்தை மீண்டும் அவரிடம் தெரிவித்தார். மேலும் தன்னை, நீங்கள் தான் முதலமைச்சர் என்றுகூறியதோடு, அதனை நீங்கள்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கூட்டி கூறவேண்டும் எனவும் ஜெயலலிதா கூறினார்' என ஓ. பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, தான் மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்ததாகவும், அதற்கு 'அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும். சென்னைக்கு சென்று நான் சொன்னதை செய்' என ஜெயலலிதா கூறியதாகவும் ஓ. பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஜெயலலிதா இறப்பதற்கு முன்தான் நான் உட்பட மூன்று அமைச்சர்கள் நேரில் பார்த்தோம்: ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்'