சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும் என ஜெயக்குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர்,
"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்து அதிமுக வெற்றியடைய உள்ள சூழலில், திமுகவினர் பல சோதனைகளை அதிமுகவிற்கு கொடுத்துவருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பதுங்கும் படையினராகச் செயல்பட்டுவருகின்றனர்.
2006இல் திமுக ஆட்சியில் நடந்தது இம்முறை நடக்கக் கூடாது!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது பூத் கைப்பற்றுதல், கலவரத்தை உண்டுபண்ணுவதற்காக திமுகவினர் கொடூர ரவுடிகளை இறக்கி இருக்கின்றனர், உடனடியாக அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், "தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ள பதற்றமான, மிகப் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் காவல் துறை பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். 100 மீட்டருக்குள் வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும், வாகனங்கள் செல்ல காவல் துறை அனுமதிக்கக் கூடாது.
அந்தந்த பூத்துக்கான முகவர் மட்டுமே வாக்குச்சாவடி மையங்களில் அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் 89 இடங்களில் மறு தேர்தல் நடத்தப்பட்டது, அந்த நிலைமை இந்த முறை ஏற்படக் கூடாது.
மாண்பை மீறி பேசிய உதயநிதி
துணை ராணுவத்தினரைப் பாதுகாப்புக்காகத் தேர்தல் ஆணையம் கொண்டுவர வேண்டும். உதயநிதி ஸ்டாலின் பரப்புரையின்போது தனது மாண்பை மீறி முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு இனி சாவுமணி எனத் தகாத சொல்லால் பேசுகிறார். அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுகவின் வாக்கு ஒருபோதும் யாரிடமும் பிரிந்து செல்லாது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பை காவல் துறை வெளியிட்டு, கொடி அணி வகுப்பு நடத்துவதை அதிகரிக்க வேண்டும்.
பூத் சிலிப்பை ஒருபோதும் திமுகவினர் கொடுக்கக் கூடாது, மாநகராட்சி அலுவலர்கள் வழங்க வேண்டும், அப்படி நடந்தால் அதிமுகவினர் புகைப்படம் எடுத்து உயர் நீதிமன்றத்திற்குத் தரப் போகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக மா.செ. கையில் போலீஸ்; தொடங்கிடுச்சு கட்டப்பஞ்சாயத்து!