சென்னை ராயபுரத்திலுள்ள புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ‘ ஜனநாயக நாட்டில் கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதன்படி நடிகர் சூர்யா கல்விக் கொள்கை குறித்து ஜனநாயக ரீதியில் கருத்து சொல்வதற்கு உரிமை உண்டு எனத் தெரிவித்தார்.
திமுகவைப் பொறுத்த வரையில் மொழியை வைத்து வியாபாரம் செய்கின்றவர்கள். தபால் துறையில் தமிழ்மொழி இல்லாதது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். இருமொழிக் கொள்கை குறித்து அதிமுகவும், திமுகவும் ஒரே படகில் ஒரே கொள்கை அடிப்படையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம், நீங்களும் நாடாளுமன்றத்தில் உங்கள் உறுப்பினர்களை வைத்து அழுத்தம் கொடுங்கள் என்றேன்.
இதற்கு என்னைத் தவறாக முரசொலியில் எழுதி, பத்திரிக்கை தர்மத்தை இழக்கிறார்கள் என்றால் அந்த அளவிற்கு நான் பேட்டி கொடுப்பதும் அவர்கள் முகத்தை கிழிப்பதும் அவர்களுக்கு பெரிய எரிச்சலூட்டுகிறது. அதனால்தான் வேறு வழி இல்லாமல் முரசொலியில் என்னை தாக்குகிறார்கள் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை எனக் காட்டமாகக் கூறினார்.