சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,திமுக ஒரு பிரிவினை வாத கட்சி என்று ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டுவிட்டது என்றும், காஷ்மீர் இந்தியாவின் எல்லைப்பகுதி அல்ல என்று திமுகவினர் கூறியிருப்பது,நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிரானது என்றும் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக தலையிட்டு நடவடிக்கைகள் எடுத்து, இந்த மாதிரியான செயல்களை ஆரம்பத்திலேயே ஒடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் பால் விலை ஏற்றம் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளாகவும், குறிப்பாக, பால் உற்பத்தியாளர்களும், நுகர்வோரும், பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை ஏற்றி கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர் என்றும், அதற்கு தீர்வு காணும் வகையில் தான் பால் விலை ஏற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
குறிப்பாக அவர் திமுக ஆட்சிக் காலத்தில் உயிர் பயத்தில் மதுரை பக்கமே செல்லாத ஸ்டாலின், அதிமுக ஆட்சியின் போது தான் இசட் பிளஸ் பாதுகாப்புடன் மதுரை பக்கம் சென்று வருவதாகவும், அதிமுக ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.