நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் உள்ள 1,592 வட்டாரங்களில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தும் வகையில் 'ஜல் சக்தி அபியான்' திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்த உள்ள பகுதிகளில் நீர்வளத்தைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்வதுமே இதன் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு நெறிமுறைகளை வகுக்கக் காரணமாக இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில், அவருடைய பிறந்தநாளில், 'அடல் புஜல் யோஜனா' என்ற பெயரில் புதிய திட்டத்தை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 7 மாநிலங்களில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 8300 கிராமங்கள், இந்தத் திட்டத்தால் பயனடைய உள்ளன.
இந்தக் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை ஐந்து ஆண்டுகளில் மேம்படுத்த ரூ.6 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 விழுக்காடு நிதி, உலக வங்கியின் மூலம் மாநிலங்களுக்கு கடனாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயனடையும் மாநிலங்களைத் தேர்வு செய்யும் முன், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விருப்பம், கருத்துகள் கேட்டு திட்டத்தை செயல்படுத்தத் தயாராக உள்ளனவா? என்பதை அறிந்த பின்னரே பட்டியல் தயாரிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்த நாட்டின் 72 விழுக்காடு நீராதாரங்கள் தற்போது காணாமல் போய்விட்டதாக "இந்தியாவின் நீர் மனிதர்" என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் நிலத்தடி நீர்மட்ட சரிவு குறித்து, அமெரிக்காவின் நாசா நிறுவனமும் நான்கு வருடங்களுக்கு முன் அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய ஏரியான மேட் ஏரியின் மொத்த நீர்க் கொள்ளளவைவிட இரு மடங்குக்கும் மேலான நிலத்தடி நீரை இந்தியா இழந்துள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்திருந்தும், தண்ணீரை வீணாக்குவது குறைந்தபாடில்லை என்றும் ராஜேந்திர சிங் வினவியுள்ளார்.
நாடு சுதந்திரமடைந்தபோது, தனி நபர் ஒருவருக்கு சராசரியாக 6,042 கியூபிக் மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் கிடைத்தது. தற்போது இதில் கால் பங்குகூட கிடைக்கவில்லை. தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம், இதுவரையிலும் இதற்கு தீர்வு காண யாரும் உரிய அக்கறை செலுத்தாதது என்றே கூறலாம். நாட்டில், மாசுக்கட்டுப்பாடு திட்டம் கொண்டுவரப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் அத்திட்டம் வெற்றி பெறவில்லை. இப்படி நீர் இழப்பைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், நீர் மேலாண்மையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாததுமே இயற்கை நீர் வளங்களை பாதுகாக்க முடியாமல் போனதற்கு காரணம் என்று மத்திய தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையில் தெரியவந்தது.
இதன் விளைவாக நிலத்தடி நீர் விவகாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், 160 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் உப்புத்தன்மையாக மாறிவிட்டதும், 230 மாவட்டங்களில் ஃபுளோரைடு அரக்கன், நீரின் தன்மையை மாற்றிவிட்டதும் தெரியவந்தது. நீர் வளத்தை பாதுகாக்க, பல்வேறு மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்திவருகின்றன. 'மிஷன் காகதியா' என்ற பெயரில் தெலங்கானா அரசும், 'நீரு செட்டு' என்ற பெயரில் ஆந்திராவும், 'சீஃப் மினிஸ்டர் ஜல் அபியான்' என்ற திட்டம் ராஜஸ்தானிலும், 'சுசாலம் சுஃபாலம் யோஜனா' என குஜராத் அரசும் என பெயர் வைத்து திட்டங்களை செயல்படுத்திவருகின்றன.
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தரமான நீரை பாதுகாப்பாக வழங்குவது என்பது எளிதான ஒன்றல்ல. நாட்டில் பாசனத்துக்கான நீர் தேவைக்கும், தற்போது கிடைக்கப்பெறும் நீரின் அளவுக்கும் இடையேயான இடைவெளி 43 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை அடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வசிக்கும் 14 கோடி குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்க 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, ஜல் ஜீவன் மிஷன் கணக்கிட்டுள்ளது. மேலும், தண்ணீர் பிரச்னைகளை எதிர்கொள்ள மத்திய நீர்வளத் துறையையும், மத்திய அரசின் நிலத்தடி நீர் விவகாரங்களுக்கான அமைப்பையும் மறு சீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என மிஹிர் ஷா கமிட்டியும் பரிந்துரை செய்தது.
எனவே, நிலத்தடி நீராதாரம் இல்லாத பகுதிகளில் உள்ள விவசாயிகள் தண்ணீர் செலவை மிச்சம் பிடிக்கும் வகையிலான பயிர்களை சாகுபடி செய்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதற்கான புதிய யுக்திகளை கையாள உரிய வழிகாட்டுதல்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். மேலும் நிலத்தடி நீருக்கான ஆதாரங்களைக் கண்காணிப்பதுடன், அதனை நிவர்த்தி செய்வது குறித்து அனைத்து நகராட்சி அமைப்புகளுக்கும் மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்றும்பட்சத்தில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள "அடல் புஜால் யோஜனா" திட்டத்தால் நாடு வளம்பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.