சென்னை: வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், ”நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து மண்டல பொறுப்பாளர் உடன் ஆலோசனை நடைபெற்றது. மண்டல பொறுப்பாளர்கள், வேட்பாளர் பட்டியல் கொடுத்துள்ளனர். இப்பட்டியல் இறுதி செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
தனித்து போட்டியிடுவோம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும். முறைகேடுகளை மீறி தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்போம். அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் சொன்ன வார்த்தை தவறு. தைரியம் இல்லை எனச் சொல்லாம், வார்த்தைகள் சரி இல்லை. அதிமுகவிற்கு தைரியம் இல்லை என்பது உண்மை தான்
கரோனா பரவல் இருக்கும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரு மாதம் தள்ளி அறிவித்திருக்கலாம். இருப்பினும் நாங்கள் போட்டியிடுவோம். கரோனா அதிகமாக இருக்கும் நிலையில் தேர்தல் நடத்துவது ஆளும் கட்சியின் இயலாமை” எனத் தெரிவித்தார்.
எந்த அண்ணாமலை?
மேலும், தஞ்சை மாணவி புகைப்படம் வெளியிட்டதற்கு அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்கிற கருத்து குறித்த கேள்விக்கு "எந்த அண்ணாமலை?” என கேட்டுவிட்டு, உறுதி செய்த பின் “தவறு என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினர்.
திமுக ஆட்சி குறித்த கேள்விக்கு, ”ஆறு மாதம் ஆட்சிக்கு பிறகு அவர்கள் வேலைகளை ஆரம்பித்து விட்டனர். அவர்களின் சுயரூபம் வெளிப்பட தொடங்கியுள்ளது” எனக் கூறி, கவிஞர் வைரமுத்து கவிதையை அடிக்கோள் காட்டி திமுக ஆட்சியை விமர்சனம் செய்து இதை மக்கள் உணர்வார்கள்” எனத் தெரிவித்தார்.
கலந்துகொண்டவர்கள்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர்கள் செந்தமிழன், ரங்கசாமி, பொருளாளர் மனோகரன், தலைமை நிலைய செயலாளர் கே.கே.உமாதேவன், மண்டல பொறுப்பாளர்கள் கரிகாலன், பார்த்திபன், பால சுந்தரம், அரூர் முருகன், டேவிட் அண்ணாதுரை, கோமல் அன்பரசு, செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஹெல்மெட், முகக்கவசம் இன்றி பைக் ரைடு; சர்ச்சையில் சிக்கிய சு.வெங்கடேசன்!