கரோனா வைரஸ் பாதிப்பால் சென்னையில் உள்ள மென் பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியது. இதனால் பலர் தங்களது வீட்டில், கிராமத்து பண்ணை, தோட்டத்து வீடுகள் என பல இடங்களிலிருந்து பணிபுரிந்துவருகின்றனர்.
வீட்டிலிருந்து பணியாற்றுவதை விரும்புகிறார்களா ஐ.டி நிறுவன பெண்கள்?
அப்படி வீட்டிலிருந்து வேலை செய்யவதை ஐ.டி நிறுவன பெண்கள் விரும்புகிறார்களா? வெறுக்கிறார்களா? என்பது குறித்து அவர்களிடம் நமது ஈடிவி பாரத் செய்தியாளர் கேட்டார். அதில், சென்னையில் உள்ள மென் பொருள் நிறுவன பெண் பணியாளர் ஒருவர் கூறுகையில், "பொதுவாக அலுவலகத்திலிருந்து பணியாற்றுகையில் எங்களுக்கு பணி தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் குழப்பங்களை தீர்க்க அலுவலகத்திலேயே தீர்வு கிடைத்துவிடும். ஆனால் வீட்டிலிருந்து பணியாற்றும் போது, அதற்கு பெருமளவு வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
இருப்பினும் வீட்டில் அனைவரோடும் இருந்து கொண்டு பணி செய்கிறோம் என்பது சற்று மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அலுவலகத்தில் எங்களுக்கான இணைய வசதிகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் அலுவலகத்தில் கிடைத்து விடும். ஆனால், வீட்டிலிருந்து பணியாற்றும் போது, அதில் அதிகளவு எங்களின் சொந்த செலவாகி விடுகிறது. மேலும், வீட்டிலிருந்து பணியாற்றுவதில் நல்லது இருக்கும் அளவிற்கு, சங்கடங்களும் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்" எனக் கூறினார்..
வீட்டிலிருந்து பணிபுரியும் பெண்கள் சந்திக்கும் உளவியல் பிரச்னை என்ன?
ஊரடங்கு கால கட்டத்தில் வீட்டிலிருந்து பணியாற்றும் பெண்கள் ஹராஸ்மெண்ட்கள் போன்ற பாதிப்புகளினால் மனதளவில் பாதிப்புகள் ஏற்படும் நிலையும் இருக்கிறது என்பதையும் நாம் பார்க்க முடிகிறது. அது போன்ற பாதிப்பிற்கு என்ன தீர்வுகளை முன் வைக்கலாம் என சென்னையில் உள்ள பிரபல மன மல மருத்துவர் மோகன்ராஜ் கூறுகையில், "தற்போதைய நிலவரப்படி வீட்டிலிருந்து பணியாற்றும் பெண்கள், ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என்றாலும் சரி, பிற பணியாளர்கள் என்றாலும் சரி, மனதளவில் அவர்களை பாதிக்கும் பிரச்னை என்று பார்த்தால் அது, தாங்கள் வீட்டு வேலைகளிலும் கவனம் செலுத்திக்கொண்டு அலுவலக பணியையும் செய்ய வேண்டும் என்பதாகும்.
இருந்தபோதிலும் பெரும்பாலான பெண்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதை வரவேற்கின்றனர். காரணம், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அருகில் இருப்பதை அவர்கள் விரும்புகிறார்கள். அதுமட்டுமின்றி அலுவலகம் செல்வதற்காக அவர்கள் தயாராகிச் செல்லும் நேரம் மிச்சமாகிறது" என்கிறார்.
வீட்டிலிருந்து பணிபுரியும் பெண்கள் சந்திக்கும் குற்றங்களை கையாளுவது எப்படி?
சரி, மன நல மருத்துவரின் கூற்று இப்படி என்றால், இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு தடுப்பு இணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் கேட்கையில், "ஊரடங்கு காலத்தில் குறிப்பாக மென் பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என ஏதும் எங்களுக்கு வரப் பெறவில்லை. இருப்பினும் எங்களுக்கு வந்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள் தயங்காமல் 1091 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் கொடுக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
மென்பொருள் பெண் ஊழியர், மன நல மருத்துவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு தடுப்பு இணை ஆணையர் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்டதில், ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து பணியாற்றுவதை வரவேற்கவும் விரும்பவும் செய்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க...திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்: நோய்த்தொற்று ஏற்படும் இடர்!