சென்னை அடையாற்றைத் தலைமையிடமாகக் கொண்டு "இயேசு அழைக்கிறார்" என்ற பெயரில் மத பரப்புரை அமைப்பை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்தவர் டி.ஜி.எஸ் தினகரன். இவரது மறைவிற்குப் பிறகு, அவரது மகனான பால் தினகரன் அமைப்பை எடுத்து நடத்தி வருகிறார்.
மேலும் கோயம்புத்தூரில் சொந்தமாக காருண்யா என்ற பெயரில் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கல்வி நிறுவனம், ஜெபக் கூட்டங்களிலிருந்து வரக்கூடிய வருமானத்தை இவரது இயேசு அழைக்கிறார் குழுமம் குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் பேரில் இன்று(ஜன.20) காலை முதலே தமிழ்நாடு முழுவதும் பால் தினகரனுக்குச் சொந்தமான 28 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை 6.30 மணி முதல் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. குறிப்பாக சென்னை அடையாறு தலைமையிட அலுவலகம், பீச் ஸ்டேஷனில் ஜெபக் கூடம், கோவையில் காருண்யா நிகர்நிலைப் பல்கலைகழகம் உள்ளிட்ட 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 300க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயேசு அழைக்கிறார் குழுமத்திற்கு வெளிநாட்டில் இருந்து கிடைக்கக்கூடிய நிதிக்கு முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வருமான வரித்துறை சோதனை முடிந்த பின்பே இயேசு அழைக்கிறார் குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்து தெரியவரும்.
இதையும் படிங்க: 'கொங்கு மண்டலத்தில் ராகுலின் வருகை எழுச்சிகரமானதாக இருக்கும்' - கே.எஸ். அழகிரி