விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவனுக்கு நாடோடிகள் 2ஆம் பாகம் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
அப்படத்தை பார்த்த பின் திருமாவளவன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இன்றைய காலச் சூழலில் இளைஞர்களுக்கு தேவையான புரட்சிக்கரமான திரைப்படம் நாடோடிகள் 2. இந்தப் படம் தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா அளவிலும் திரையிடப்பட வேண்டும் .
சங்கர் கௌசல்யா விவகாரம் தொடர்பான படம் இது பகலில் சந்தையில் நடந்த சம்பவத்தை பத்தோடு பதினொன்றாக கடந்து செல்லாமல் அதனை திரைப்படமாக எடுத்த இயக்குநர் சமுத்திரக்கனிக்கு எனது பாராட்டுக்கள்.
சிஏஏ எதிராக பிப்ரவரி 22ஆம் தேதி தேசம் காப்போம் என்ற பேரணியை திருச்சியில் ஏற்பாடு செய்துள்ளோம்.சி.ஏ.ஏ.வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டுமே போராடுகிறார்கள் என்பது போல் சொல்கிறார்கள்.
ஆனால் அனைத்து தரப்பினருமே பாதிக்கும் வகையில் உள்ளதால் அனைவரும் போராடுக்கிறார்கள். டெல்லியில் ஆம் ஆத்மி வெல்லும் என தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகள் சொல்கின்றன. இலவசங்களை பாஜக அறிவித்திருந்தாலும் அக்கட்சிக்கு எதிரான நிலைதான் உள்ளது. ஆகையால் பாஜக முயற்சி அங்கு எடுபடாது.
படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வருமான வரிச்சோதனை என்பது இதுவரை நடைபெறாத ஒன்று. வருமான வரித்துறை சோதனைக்கு அப்பாற்பட்டவர் நடிகர் விஜய் என்று தாம் வாதிடவில்லை.
எனினும் விஜய் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டது வெளிப்படையாக தெரிகிறது. இதில் ஆளுங்கட்சியின் தலையீடு உள்ளது. சிஏஏ ஆதரவாக கருத்து தெரிவிப்பதன் மூலம் நடிகர் ரஜினி பாஜகவிற்கு தோழமையாக இருக்கிறார் என்பது தெரிகிறது” என்றார்.
இதையும் படிங்க: விஜய் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் : அர்ஜுன் சம்பத்