சமூக வலைதளம் மூலமாக டெல்லி, தமிழ்நாடு கியூ பிரிவு காவல் துறையினருக்கு ஐ.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான அல் ஹிந்த் டிரஸ்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப் போவதாகக் கடிதம் எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில், “டெல்லி, தமிழ்நாடு கியூ பிரிவு போலீஸ் நா....களே, உங்களை நாங்கள் கடந்த சில மாதங்களாக கண்காணித்துவருகின்றோம். தக்க நேரத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி பதிலடி கொடுப்போம்” என டெலிகிராம் மூலமாக தமிழில் எழுதி, அந்தக் கடிதத்தைச் சுற்றி வெடிகுண்டுகளையும், துப்பாக்கிகளையும் வைத்து மிரட்டும்விதமாக அனுப்பியுள்ளனர்.
அக்கடிதம் இரண்டு வாரத்திற்கு முன்பு வெளியாகியுள்ளது தெரியவந்துள்ளது. டெல்லி காவல் துறையினர், அம்பத்தூர் கொலை வழக்கில், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய காஜா மொய்தீனை கைதுசெய்தனர். மேலும் தமிழ்நாடு கியூ பிரிவு காவல் துறையினர் பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்ததாகக் கூறி பெங்களூருவில் ஆறு பேரை கைதுசெய்தனர்.
இதற்குப் பழிவாங்கும் நோக்கத்தோடு தற்போது ஐ.எஸ். அமைப்பினர் காவல்துறையினரை மிரட்டும்விதமாக கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்தக் கடிதம் தமிழில் எழுதப்பட்டுள்ளதால் பல்வேறு சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளது. இந்தக் கடிதம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.