சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் வசிக்கும் சென்னை மாநகரில் அரசின் 108 ஆம்புலன்சின் எண்ணிக்கை வெறும் 150 தான் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மொத்தமாக 50 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே உள்ளதாகவும், அதிலும் அமரர் ஊர்திகள் மொத்தமே 15 தான் என்றும் கூறப்படுகிறது.
இவை தவிர, அரசு மருத்துவமனைகளுக்காக, ரெட் கிராஸ் அமைப்பால் 50 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. மாநகராட்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கென இருக்கும் சில ஆம்புலன்ஸ் வாகனங்கள், பெரும்பாலும் சுகாதார பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
அதேவேளையில், சுமார் 900 தனியார் ஆம்புலன்ஸ்கள் சென்னை நகரில் இருப்பதாக அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
கரோனா பாதிப்புகள் உச்சத்தை அடைந்துள்ள இக்காலக்கட்டத்தில், ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகரித்துள்ளன. இரவு பகலாக ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுவதால் அதற்கு தேவையான ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பலரும் வெளி மாவட்டங்களில் இருந்து பணியமர்த்தபட்டுள்ளனர்.
போதிய அளவில் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டாலும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதனையடுத்து, அடிப்படை தேவைகள் மற்றும் விடுப்பு வழங்கப்படாததால் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை நகரில் கரோனா பாதித்த ஏராளமானோர் கடும் அவதியடைந்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் நிலைமை தற்காலிகமாக சீரடைந்தது. இருப்பினும், தங்களின் பாதிப்பு பொதுமக்களையும் பாதிக்கும் என்பதை அரசு ஏனோ புரிந்து கொள்ளவில்லை என வருந்துகின்றனர் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்.
ஏற்கனவே போதிய ஆம்புலன்ஸ் இன்றி நோயாளிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள சூழலில், வெளியூர்களுக்கு செல்லும் அமரர் ஊர்திகளில் இரண்டு உடல்கள் கிடைக்கும் வரை அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பது நரக வேதனை என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். வசதி உள்ளவர்கள் தனியார் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தும் அதேவேளை, ஏழை மற்றும் நடுத்தர நிலையினர் 108 மற்றும் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ்களையே நம்பியுள்ளனர்.
எனவே, 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்குவதில் உள்ள பிரச்சனைகள் விரைவாக களையப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்திகளை அதிகப்படுத்த வேண்டும். அப்போது தான் இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில், விரைந்து மக்களுக்கு பணியாற்ற முடியும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை புறநகர்!