ஜிஎஸ்டி முறையாக செலுத்தாமல் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து மோசடி செய்து வருகிறது. போலி ஆவணங்கள் மூலமாக முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் நிறுவன இயக்குநர்களை ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலர்கள் கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர்.
அந்த அடிப்படையில் ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தி சென்னையைச் சேர்ந்த உதிரிபாகங்கள் நிறுவனத்தின் இயக்குனரை கைது செய்துள்ளனர்.
அவர்கள், போலியாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் பெயரில் போலி ரசீதுகளை சமர்ப்பித்து கோடிக்கணக்கில் மோசடி செய்ததை கண்டுபிடித்தனர்.
சுமார் 150 கோடி ரூபாய்க்கு போலி ரசீதுகளை சமர்ப்பித்து 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலர்களால் நடைபெறும் ஐந்தாவது கைது நடவடிக்கை இது என சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 33 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி செய்ததாக சென்னை பெரியமேட்டை சேர்ந்த ஒருவரும், பிரபல துணிக்கடை நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர், மேலும் 2 பேர் 10 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.