சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், விக்னேஷின் மரணம், சென்னை ஐஐடியில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின ஆராய்ச்சி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹெல்டர் விசாரிக்க சென்னை வந்திருந்தார்.
விக்னேஷ் தாழ்த்தப்பட்டவர் என்பதற்கான ஆவணம்: அப்போது செய்தியாளரிடம் பேசிய அருண் ஹெட்லர், "விக்னேஷின் மரணம், அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை எனச்சொல்லி மூடிமறைக்கப் பார்த்தார்கள். ஆனால், அந்த ஆவணத்தை டெல்லியில் இருந்து புறப்படும்பொழுது, எடுத்து வந்து இருக்கிறோம். அவரது சகோதரர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பது தற்போது காவல் துறையிடம் கொடுத்துள்ளோம்.
சிபிசிஐடி அறிக்கை தரவேண்டும்: விக்னேஷின் மரணத்திற்கு யார் காரணம் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் வெளி வர வேண்டியிருக்கிறது. தற்போது மூன்று காவல் துறையினரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். விக்னேஷ் மரணத்தின்போது, யார் யாரெல்லாம் அப்போது பணியில் இருந்தார்களோ அவர்கள் மீதும் நடவடிக்கை தேவை. இந்த வழக்கில் சிபிசிஐடி தனது அறிக்கையினைத் தர வேண்டும். அதேபோல, விக்னேஷின் உடற்கூராய்வு அறிக்கையினை சேர்த்து, நாங்கள் ஒரு அறிக்கையை ஆணையத்திடம் தாக்கல் செய்வோம்.
சென்னை ஐஐடியில் பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை: இதேபோல, சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தினோம். அந்தப் பெண் தனக்கு என்ன நேர்ந்தது என்று எங்களிடம் சொன்னார். இதேபோல, அங்கு இருக்கக்கூடிய பேராசிரியர்களிடமும் விசாரணை செய்யப்பட்டது. ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் கூறியதும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்பது விதி.
சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியவருக்கும் இங்கு அமைச்சர் பதவி: தமிழ்நாட்டில் சாதிப் பிரச்னை அதிகமாக உள்ளது. குறிப்பாக, ஒரு அமைச்சரே (ராஜ கண்ணப்பன்) சாதிப் பெயரை சொல்லி திட்டுகிறார். ஆனால், அவர் மேல் நடவடிக்கை எடுக்காமல், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக ஆக்கியுள்ளனர். இப்படிப்பட்ட நிலைதான் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த இரு வழக்குகள் குறித்தும் 15 நாட்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: Vignesh Lockup death : தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் விசாரணை!