திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களின் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. எனவே காவல் துறையினர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்
மேலும், “தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் அமைதியாகப் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். பொதுமக்களுக்குப் பயமோ பதற்றமான சூழ்நிலையையோ அரசு உருவாக்கக் கூடாது. சட்ட ஒழுங்கை முழுமையாகக் காப்பாற்றகூடிய வகையில் காவல் துறைகள் செயல்படும் வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
சமூக வலைதளங்களில் நம்மையும் தீமையும் இருக்கிறது. அதைத் தவறுதலாகப் பயன்படுத்தினால் கெடுதல் உண்டாகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற வகையில் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடாது.
சோனியா காந்தி அவர்கள் காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது இடைக்கால ஏற்பாடுதான் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி அவர்கள் ஏற்றுச் செயல்பட வேண்டும் என்று கட்சியின் தொண்டர்களும் பொதுமக்களும் தோழமை கட்சித் தலைவர்களும் விரும்புகின்றனர்” என்று அவர் கூறினார்.