சென்னை: உலகம் முழுவதும் கரோனா முதல் அலை காரணமாக பன்னாட்டு விமான சேவை கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் முதல் அலை முடிந்த பின் உள்நாட்டு விமான சேவை மட்டும் தொடங்கப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டது. ஆனால், பன்னாட்டு விமான சேவைகள் 'வந்தே பாரத்' மற்றும் சிறப்பு விமானங்கள் திட்டத்தின்கீழ் இயக்கப்பட்டு வந்தன.
இந்தாண்டு (2022) ஜனவரி மாதம் முதல் வழக்கமான பன்னாட்டு விமான சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா 3ஆவது அலை, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல்கள் காரணமாக விமான சேவைகள் இயக்குவது தள்ளிவைக்கப்பட்டது.
தொற்று பாதிப்பு குறைந்து, வழக்கமான சூழல் திரும்பி உள்ள நிலையில், மார்ச் 27ஆம் தேதி (இன்று) முதல் பன்னாட்டு விமான சேவைகள் தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை முன்னர் அறிவித்தது. இதற்கான ஆயத்தப் பணிகளில் விமான நிலைய ஆணையக அலுவலர்களும் விமான நிறுவனங்களும் ஈடுபட்டன.
பன்னாட்டு விமான சேவை: இந்நிலையில், இன்று (மார்ச் 27) முதல் சென்னையில் இருந்து பன்னாட்டு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று 27 விமானங்கள் வர உள்ளன. மேலும், 30 விமானங்கள் புறப்பட திட்டமிட்டுள்ளன. அதில், முதல் விமானம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு 156 பயணிகளுடன் அபுதாபிக்கு புறப்பட்டு சென்றது. இன்று காலை முதல் தற்போது வரை 17 பன்னாட்டு விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளது. முழு அளவில் பன்னாட்டு விமான சேவைகள் தொடங்க ஓரிரு வாரங்கள் ஆகும் என விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாடார் வங்கி ? நாடார்களிடமே இருக்குமா?